Tuesday, August 30, 2011

மூவரின் தூக்கு நம் இனத்தின் மீதான சுருக்கு


அறத்தையே வாழ்வாகக் கொண்டு எவ்வுயிற்கும் அறம்போற்றிய இனம் தமிழினம். இன்று நீதிக்காக யார் யாரிடமோ கையேந்தி நிற்கிறோம். அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியை தேச தந்தையாகக் கொண்ட இந்தியா தமிழினத்திற்கு எமனாக நின்று நமது இரத்தத்தை குடிக்கிறது.இனி அவர்கள் தங்களின் தேச தந்தையாக எமனைத்தான் ஏற்கவேண்டும்.

ஒன்றரை இலட்சம் உயிர்களைக் குடித்தும் வெறி தீராமல் இன்னும் மூன்று அப்பவிகளின் உயிரையும் குடிக்க துடித்துக்கொண்டு இருக்கிறது. 11 ஆண்டுகாலம் முடிவெடுக்காமல் நிறுத்திவைக்கப்பட்ட கருணை மனுவால் ஒவ்வொரு நாளும் தூக்கை எதிர்நோக்கி வாழ்ந்த அந்த மனநிலை தூக்குத் தண்டனையை விட மேலான மிகவும் கொடுமையான தண்டனை ஆகும். இதனால் தண்டிக்கப்பட்டது பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழ்ச்சகோதரர்கள் மட்டும் இல்லை. அவர்களின் குடும்பமும் சேர்ந்தே இதில் தண்டனையை அனுபவித்தது.

இராசீவ்காந்தி கொலைவழக்கு நடந்த விதம் என்பது நீதியை குழிதொண்டி புதைத்து தமிழர்களை பழிவங்கும் நோக்கத்துடனேயே முன் தீர்மானத்தோடு நடத்தப்பட்ட ஒரு வழக்காகும்.

இராசீவ்காந்தி கொலை தொடர்பாக பல்வேறு விசாரணை அமைப்புகள் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது, அவற்றில் ஜெயின் கமிஷனும், வர்மா கமிஷனும், தங்களது அறிக்கைகளை சமர்பித்து பல ஐயங்களை வெளியிட்டு இருந்தது.அதனடிப்படையில் எந்த நடவடிக்கையும் இல்லை.ஜெயின் கமிஷன் தனது விசாரணை சார்ந்த சில கோப்புகளை இந்திய மத்திய அரசிடம் கேட்டது. ஆனல் நரசிம்மராவின் கங்கிரசு அரசு அந்த கோப்புகளை காணவில்லை என்று பதில் சொன்னது. இங்கே கவனிக்கபடவேண்டிய விடயம் சந்திராசமி நரசிம்மராவின் நெருங்கிய நண்பர். ஜெயின் கமிஷன் சந்திராசமியை சந்தேக நபர் தீரவிசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. ஆகவே கங்கிரசு கட்சியே இராசீவ் காந்தியின் கொலைவழக்கு விசரணையை நேர்மையாக நடத்த விரும்பவில்லை.

இதை தொடர்ந்து அமைக்கப்பட்ட பண்ணோக்கு விசாரணைக்குழு தனது பணியை தொடங்கி முழுமையடையாத நிலையில், இந்த வழக்கில் மரண தண்டனை வழங்குவது என்பது நீதிக்கு முரணானது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இவ்வழக்கானது சி.பி.ஐ அமைப்பால் தடா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது. தடா சட்டம் என்பது மனித உரிமைக்கு எதிரான சட்டம் என்பதால் இந்திய அரசே அதனை காலவதியாக்கியது. இவ்வழக்கை தடா சட்டத்தின் கீழ் விசாரித்தது தவறு என்றும் ஆனல் வாக்குமூலங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்திய நீதித்துறையின் பெரிய முரண்பாடு ஆகும்.
தடா சட்டத்தின்படி 20 வயதிற்குட்பட்டவர்களை கைதுசெய்ய இயலாது என்`ற நிலையிலும் 19 வயதே நிரம்பிய பேரறிவாளன் இச்சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பது இவ்விசாரணையின் முரண்பாட்டை தெரிந்துகொள்ள போதுமானது. பேரறிவாளன் தான் எழுதிய மடல்களில் அரசு தரப்பு வாதங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும், தங்களது வாதங்களை பதிவு செய்யப்படாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார். இதோடு மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்தி வாக்குமூலத்தை வாங்கியதாகவும் குறிப்பிடுகிறார்கள். இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் ஏற்கனவே 22 பேர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால் சி.பி.ஐ இந்த வழக்கில் அப்பாவிகளையே குற்றவாளிகளாக்கி இருக்கிறது. ஆகவே நீதிக்கு புறம்பான இந்த வழக்கும் அதன் தீப்பும் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.

அப்படி தூக்குத்தண்டனை கொடுக்கும் அளவுக்கு என்ன குற்றம் செய்தார்கள் இவர்கள். பேரறிவாளன் ஒரு பேட்டரியை வங்கி கொடுத்தார் என்று சொல்கிறது சி.பி.ஐ. அவர் வாங்கினார் என்பதற்கோ அந்த பேட்டரிதான் கொலைசெய்யபட்டவர்கள் பயன்படுதினார்கள் என்பதற்கோ எந்த விதமான ஆதாராமும் சான்றும் இல்லை. இதை நிறுபிக்கவும் இல்லை சி.பி.ஐ. இந்த வழக்கில் கதை வசனம் எழுதி புனைவுகளை உருவாக்கி அப்பவித் தமிழர்களை பழிதீர்த்து விட்டர்கள் என்பதே உண்மை.

தடா வழக்கு என்பதால் அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உயர் நீதிமன்ற மேல் முறையீடும் இல்லாமல் போனது. ஆகவே பலமாக நீதியின் கதவுகள் அடைக்கப்பட்டு தூக்குக்கொட்டடிக்கு கொண்டு செல்லப்பட்டவர்களே இவர்கள்.
கருணை மனு மூலமாகவாது நீதியை வென்றெடுக்கலாம் என்று இருந்தபோதும் நீதிபதியாக இருந்து ஆளுநர் ஆன பாத்திமாபீவீ தமிழ்நாடு அமைசரவையின் ஒப்புதல் இன்றி நிராகரித்தார். உயர்நீதிமன்றம் இந்த நிராகரிப்பை தவறு என்று சுட்டிக்காட்டியது. இந்த நிலையில்தான் இந்திய அரசின் ஜனாதிபதிக்கு கருணை மனு கொடுக்கப்பட்டு 11 ஆண்டுகள் முடிவெடுக்காமல் நிறுத்துவைக்கப்பட்டு இருந்தது.

தேர்தலில் தோற்றும் பணநாயகத்தால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு ஜனநாயகத்தைக்கொன்ற ப.சிதம்பரம் அமைச்சராக இருக்கும் உள்த்துறை குடியரசுத்தலைவருக்கு கருணைமனுவை நிராகரிக்குமாறு பரிந்துறை அனுப்பி இருக்கிறது. இந்த பசப்பு சிறிப்பு பகல்வேடக்காரன் தமிழனாக பிறந்ததை சந்தேகப்படவேண்டி இருக்கிறது. எல்ல நிலையிலும் அநீதியாக தோற்கடிக்கப்பட்ட அப்பாவிகளை இன்று தூக்குக் கயிற்றுக்கு அருகில் நெருக்கித்தள்ளி இருக்கிறது இந்தியாவின் நீதி.

இன்று நாம் அவர்களைக்காப்பாற்ற ஏதாவது ஒருவழி தேடி நிற்கிறோம். இருந்த ஒரு வழியையும் தமிழக முதல்வர் செயலலிதா அறைந்து சாத்திவிட்டார். இனி இதை திறப்பது நமது பேரெழுச்சியான் போராட்டதிலேயே தங்கி இருக்கிறது.
சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர சட்டமன்ற உறுப்பினர்களால் கொடுக்கப்பட்ட தீர்மானத்தை பிடிவாதமாக விவாதத்திற்கு எடுக்காமல் விட்டதன் மூலம் தமிழக அரசுக்கு அக்கரை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரித்து இருப்பதால் அதில் தலையிட தனக்கு அதிகாரமில்லை என இன்று சட்டமன்றத்தில் சொல்லி இருக்கிறார் முதல்வர் செயலாலிதா. இது தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையாகும்.இந்த கூற்றில் துளியளவும் உண்மை இல்லை. விதி 161ன் படியே நாம் செயலலிதவை தமது அதிகாரத்தை பயன்படுத்தச் சொல்கிறோம். விதி 161 படி ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரமும் கவர்னரின் மன்னிப்பு அதிகாரமும் ஒன்றே ஆகும். இதற்கு முன்னுதாரனமாக தயாசிங் வழக்கை எடுத்துகொள்ளலாம்.இந்த வழக்கில் குடியரசு தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகும் மாநில ஆளுநருக்கு கருணை மனுபோடுகிறார். அவ்வறு போடுவதற்கு விதி 161 இடமளிக்கிறது என உச்சநீதி மன்றம் விளக்கமளித்துள்ளது. இதற்கு முன்னுதாரனமாக இன்னொரு வழக்கும் இருக்கிறது. கேரளத்தில் சி.ஏ.பாலன் கருணை மனுவை அப்போது குடியரசுத் தலைவர் நிராகரித்த பின் முதலமைச்சராக இருந்த இ.எம். எஸ் நம்பூதிரிபாட் அவர்களும் (1957) அப்போது கேரளா சட்ட அமைச்சராக இருந்த வீ.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்களும் தாங்கள் விதி 161ஐ பயன்படுத்தி சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனை நீக்கப் போவதாக அறிவித்தார்கள். அதன்பிறகு இந்திய அரசு இறங்கி வந்து சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று அவரது தூக்குத் தண்டனையை நீக்கியது. தமிழக முதல்வர் இந்த முன் எடுத்துக்காட்டை பின்பற்றியாவது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் கருணை மனுவை மறு ஆய்வு செய்து ஏற்குமாறு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம். தீர்மனத்தை நிறைவேற்றியதோடு நில்லாமல் உள்துறையையும் தன் வசம் வைதிருப்பதால் ஆளுநருக்கு கருணை மனுவை ஏற்குமாறு பரிந்துரையையும் அனுப்பி வைக்க வேண்டும்.அதை விடுத்து இந்த பிரச்சினையில் இருந்து ஒதுங்கிக்கொள்வதை தமிழமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள்.
தமிழர்களே நாம் தமிழக அரசு, இந்திய அரசு ஆகிய இரண்டையும் பணியவைக்கும் அளவில் நமது போராட்டதை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.



பேரறிவாளன் எதற்காக வங்குகிறோம் என்று தெரியாமல் ஒரு பேட்டரியை வாங்கிக்கொடுத்தது தூக்குத்தண்டனைக்குறிய குற்றமா..? என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.
இது குற்றமென்றால் எங்கள் மீது ஏவபட்ட இந்திய அரசின் கொடுங்கோண்மைக்கு என்ன தண்டனை. தமிழர்களே..?
இந்தி எதிர்ப்பு போராட்டதில் 400 பேர்வரை சுட்டுக்கொன்ற இந்திய இராணுவத்துக்கும் அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது?
அகிம்சையை கையிலெடுத்து போராடிய வீரவேங்கைதிலீபனை கொன்ற இந்திய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் என்னை தண்டனை கொடுக்கப்பட்டது..?
அமைதிப்படை என்கிற பெயரில் அணுப்பபட்ட அட்டூழியப்படை செய்த பாலியல் வல்லுறவுகளுக்கும் கொலைகளுக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது.?
ஆயுதங்களை அள்ளிக்கொடுத்து ஈழத்தமிழர்களின் போராட்டத்தை நசுக்கி இலட்சக்கன தமிழர்களை கொன்று இனக்கொலை புரிந்த இந்திய அரசுகும் அதிகரிகளிக்கும் என்ன தண்டனை.?
தொடர்ந்தும் சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டு இறந்துபோன ஆயிரம் வரையிலான தமிழக மீனவர்களை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை..? கொலை செய்ய விட்டு காவல் காத்த இந்திய இராணுவத்துகு என்ன தண்டனை?இதற்காக ஒரு வழக்கு கூட இன்னும் பதியவில்லையே. தமிழர்களே சிந்திப்போம்.
பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரின் கழுத்தை நெரிக்கத்துடிக்கும் தூக்குக்கயிறு அவர்கள் மூன்று பேரைமட்டும் நெறிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழினத்தின் குரல்வளையையும் நெரித்துக்கொண்டிறுக்கும், நெரிக்கப்போகும் கயிறாகும். இதனை உணர்ந்து நாம் போராட்டத்தை தொடர்ந்தும் நடத்த வேண்டும். சகோதரி செங்கொடி இந்த போராட்டத்தில் தன்னை முன்னிறுத்தி சென்று இருக்கிறார். அவரின் தியாகம் வெற்றி பெறவேண்டும். ஒரு தனிமனிதனாக நான் எப்படி போராடுவது என்று சிந்திக்கலாம். கீழ்கண்ட போராடமுறைகளை கையிலெடுத்து நாம் தீவிரமாக போராடுவோம்.


அந்தந்த பகுதிகளில் எந்த இயக்கங்கள் போரடினாலும் கருத்து வேறுபாடுகளை மறந்து நேரடியாகச் சென்று பங்கெடுத்து ஆதரவுகொடுக்கவேண்டும். முடிந்தவரை குடிம்பத்துடன் போராடுவோம்.


கல்லுரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கனித்தும், அரசு அதிகாரிகள் பணிகளை புறக்கனித்தும், அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கவே கூடாதபடி செய்ய வேண்டும்.

இந்த தூக்குதண்டனை நிறுத்துவைக்கப்படும் வரை எல்லோரும் கருப்புக்கொடி அணிவோம்.

தன்னோடு வேலை செய்யும் தமிழர்களுக்கு பிரச்சினைகளை விளக்கி அவர்களையும் இனைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நம்மவர்கள் நமக்கென்ன என்று இருந்துவிடக்கூடும்.

ஏற்கனவே வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடங்கி விட்டர்கள். அவர்களின் பின்நின்று ஆதரவு கொடுக்க வேண்டும்.

மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்படவேண்டும்.ஒரு இந்திய மத்திய அரசு அலுவலகங்கள் கூட இயங்ககூடாது. ஏற்கனவே குஜார் இன மக்கள் போராடிய விதத்தை நாமும் கையில் எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலிருந்து தொடர்வண்டிகள் இயங்கவே கூடாது.

ஆங்கங்கே தொடர்ந்து தன்னெழுச்சியாக போராட்டவடிவங்களை முன்னெடுக்க வேண்டும்.

தொழிற்சங்கங்களில் உள்ளோர் அந்தந்த சங்கங்களை வலியுறுத்தி போராட வைக்க வேண்டும்.


காவல்துறையில் உள்ள தமிழர்கள் தமிழர்களின் போரட்டத்தை ஒடுக்கமால் தமிழர்களாக நடந்துகொள்ளவேண்டும். மற்ற மாநில கவல்துறையினர் எப்படியோ அப்படியே நீங்களும் நடந்துகொள்ளுங்கள்.

 வீதி வீதியாக கிராமம் கிராமாக மக்களை சந்தித்து இருக்கும் வய்புகளை பயன்படுத்தி போரடுவோம்.

போரட்டத்துக்கு வரமுடியாதவர்கள் கருத்துக்களை துண்டறிக்கையாக மாற்றி தங்களால் இயன்ற பொருட்செலவில் போராடுவோம்.

சிறைக்கு செல்ல அனைவரும் தயாராக இருப்போம்.

வணிகர்கள் தாங்களாகவே கடையடைபுகளை நடத்த வேண்டும்.

நாம் நடதுகிற போரில் தமிழ் தேசியம் வெற்றிபெறவேண்டும். இந்திய தேசியம் தோற்கடிக்கபட வேண்டும். விரைவாக களம் காண்போம் மூவரின் தூக்கு நம் இனத்தின் மீதான சுருக்கு …

தோழர் சிவா.

உதவி : தமிழ்தேசப் பொதுவுடமை கட்சி வெளியீடுகள்

Friday, June 25, 2010

செம்மொழி கொன்றான் - கருணாநிதி

தமிழ்நாட்டு கிராமங்களில் இந்தி திணிப்பு


 செம்மொழி மாநாடு தொடங்கிவிட்டது. நிறைய பேருக்கு நடுநிலையாக இதை பார்க்க விருப்பம் என்கிறார்கள். அது ஒரு தமிழ் வளர்ச்சிக்கான மாநாடு என்று நினைத்து  அதை ஆதரிக்க வேண்டுமாம்.அதுவும் அதிர்வு வெளியிட்ட புலிகளின் அறிக்கை வந்ததும் இந்த நடுநிலையாளர்கள் கொஞ்சம் தைரியம் வந்தவர்களாய் கிளம்பிவிட்டார்கள். எங்களை பொறுத்தவரை இரண்டும் கெட்டான் எந்த விதத்திலும் பயனற்றவர்களே. தி.மு.க வினரை பற்றி சொல்லவும் தேவை இல்லை.இது அவர்களின் கட்சி மாநாடு.
      செம்மொழி மாநாடு நடத்துகிற கருணாநிதியும் தி.மு.வும் ஐந்து முறை தமிழ்நாட்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்று முதலமைச்சர் இருக்கையை தேய்த்ததை தவிர வேறொன்றும் செய்துவிடவில்லை என்பதே உண்மை. 1965-ல் மொழிப்போராட்த்தை மாணவர்கள் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு போராட்டத்தின் தீவிரத்தைக்கட்டுப்படுத்தி,  பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த  காலத்தில் இருந்தே தி.மு.க வின் தூரோக வரலாறும் தொடங்கிவிட்டது. இருமொழிக்கொள்கை மும்மொழிக்கொள்கை என்ற மோசடி வார்த்தைகளைத்தவி வேறொன்றையும் தமிழ்நாடு கண்டது இல்லை.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வார்த்தைகளால் ஏமாற்றிக் கொண்டே எங்கேயும் தமிழின்றி செய்து முடித்தவர்கள்தான் இந்த கூட்டம்.

செம்மொழிக்கான அனைத்துத்தகுதிகளும் இருந்தும் தமிழ் மொழி உண்மையான செம்மொழிக்கான தகுதிகளுடன் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழை செம்மொழியாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாத இந்திய அரசு வஞ்சனையுடன் தனிப்பட்டியலில் செம்மொழியாக அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே 2000-ம் ஆண்டுகள் பழமையானது என்ற தகுதியை 1000-ம் ஆண்டுகள் பழமையானது என்று குறைக்கப்பட்டு 1000-ம் ஆண்டுகளுக்குட்பட்ட மொழிகளுடன் சேர்க்கப்பட்டே செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியைத்தட்டிக்கேட்க முடியாத கருணாநிதி (இதில் கருணாநிதியும் கூட்டுக்களவாணி) அன்று அய்யா மணவை முஸ்தஃபா போன்றவர்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் விளம்பரம் மட்டும் செம்மொழி கொண்டான்...! என்றே போட்டுக்கொள்கிறார்கள்...
இந்த செம்மொழி கொண்டான் உண்மையில் செம்மொழி கொன்றான் என்றே சொல்லவேண்டிய ஆள்..
இதற்கான காரணம் ஒன்று இரண்டல்ல ஏராளம். தமிழ் மொழிக்கு, இனத்திற்கு என்று செய்த துரோகம் மறக்கக்கூடியது இல்லை. அதனை மறந்து இந்த மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவோ, வாழ்த்துக்கூறவோ, எந்த நியாயமும் இல்லை.ஏனெனில் அதில் வெறும் கருணாநிதி துதி பாடல்களே நடக்கப்போகிறது.
  கருணாநிதியின் உண்மை முகத்தை தெரிந்துகொண்டால் இதை எளிதாக புரிந்துகொள்ளலாம்.
  அய்யா தேவநேயப்பாவாணர் அவர்கள் தனது வாழ்நாளை அர்ப்ணித்துக்கொண்டு தமிழர் வரலாற்றை வெளிக்கொண்டுவந்தவர். அவரை விட சிறப்பான தமிழறிஞர் இன்றளவும் இல்லை. அவர் கடைசிக்காலத்தில் கருணாநிதிக்கு  ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் கருணாநிதியிடம்  அய்யா தேவநேயப் பாவாணர்  வேண்டியது கொஞ்சக் காலத்துக்கு உணவுக்கும் தங்கும் இடத்திற்கும் வழிசெய்யவேண்டும், நான் எனது கடைசி ஆய்வுகளை முடிக்கும் வரை இந்த உதவியை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த உதவிகளை செய்து இருந்தால் தமிழுக்கும் இனத்துக்கும் அவர் இன்னும் சிறப்பான பணிகளை செய்து இருப்பார். முதலமைச்சராக இருந்தும் கயவன் கருணாநிதி கடைசிவரை கண்டுகொள்ளவே இல்லை. கடைசிக்காலத்தில் தமிழனின் வரலாற்றை எழுதிய அய்யா வறுமையில் வாழ்ந்தார். இது ஒரு தமிழறிஞரை கருணாநிதி போற்றிய விதம்..!.
  மொழிப்போருக்கு உரிமை கொண்டாடும் தி.மு.க. மொழிப்போர் வரலாற்றை இதுவரைக்கும் அடுத்த தலைமுறை படிக்கும் விதத்தில் பாடத் திட்ட்த்தில் சேர்க்காதவர் தான் இந்த செம்மொழிகொண்டான். எத்தனை தமிழறிஞர்களின் வரலாறு மாணவர்களுக்கு போய்ச்சேர்கிறது. கண்டவனுக்கெல்லாம் மணிமண்டபம் கட்டும் கருணாநிதி மொழிப்போர் தியாகிகளுக்கு செய்தது எதுவுமே இல்லையே..இதன் பொருள் என்ன..?  மொழிப்போராட்டத்தாலும் , மொழிப்போராட்ட தியாகிகளாலும்   கருணாநிதியின்  புகழ் மங்கிவிடும் என்பதால் தானே இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை....

 பக்கத்தில் உள்ள கர்நாடகாவில் பத்தாம் வகுப்புவரை கன்னடமொழியை ஒரு மொழிப்பாடமாக கட்டாயம் படித்தே ஆகவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கருணாநிதி ஐந்து முறை ஆட்சிபொறுப்பில் இருந்தும் சட்டம் இயற்றவில்லை. ஐந்தாம் வகுப்புவரை தமிழை தமிழ்நாட்டில் பயிற்று மொழியாக்க ஒரு அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணை என்பது சட்டம் இல்லை .ஆதலால் தி.மு.க.வின் ஒன்றிய செயளாலர் ஒருவராலயே நீதிமன்றத்தில் தடையாணை வாங்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் தான் ஒருவன் தமிழ் மொழியைப் படிக்காமலே உயர்படிப்புவரை படிக்கலாம். இது இன்றும் தொடர்கிறது. இந்த நிலை தொடர பொறுப்பானவர் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி இல்லையா..?
  தமிழை தமிழ்நாட்டில் பயிற்று மொழியாக்க ஒரு அணுவளவேனும் முயற்சி செய்யாமல் செம்மொழி மாநாடு நடத்தி தமிழ்மொழி வளர்ச்சிக்கு என்றால் இதன் பெயர் என்ன...? மோசடி இல்லையா..?

 வேலை வாய்ப்பில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். அப்போதுதான் தமிழ் மொழியில் படிப்போருக்கு வேலை உறுதிசெய்யப்படும் என்று கோரிக்கை வைத்து போராடிக்கொண்டே  இருக்கிறோம் . இதை ஏன் இன்னும் செயல்படுத்த எண்ணம் இல்லை..? இது தமிழ் மொழி வளர்ச்சியில் சேர்க்கமுடியாததா..?

டி.ஆர்.பாலு மத்தியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் மைல்கற்களில் ஹிந்தியில் எழுதப்பட்டதே.? அப்போது இவர்கள் சொன்ன பதில் இன்றும் நினைவில் இருக்கிறது. வட இந்தியக்காரன் சரக்குந்து ஓட்டிவருகிறான் என்பதற்காக தமிழ்நாட்டு மைல்கல் ஹிந்தி எழுத்துக்களை சுமக்க வேண்டும் என்று நாக்கூசாமல் சொன்னார்களே..? இவர்ளால் வேறு மாநிலத்தில் இப்படி பேச முடியுமா..? இவர்கள் நடத்தும் செம்மொழி மாநாடு தமிழை வளர்க்கும் என்று நாங்கள் நம்பவும் வேண்டுமோ...?
இன்றளவும் இந்திய அரசு தனது திட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் சூட்டி தமிழ்நாட்டு குக்கிராமங்களுக்கும் (படம் இனைக்கப்பட்டுள்ளது) சென்று விளம்பரம் வைக்கிறதே. கருணாநிதி அரசின் கவனத்துக்கு வராமல்தானா இந்த ஹிந்தி திணிப்பு நடக்கிறது..?.

தமிழ்நாடு அரசின் அரசு விரைவுப் பேருந்துகள் முழுவதிலும் ஆங்கிலத்தில் S.E.T.C என்ற எழுத்துக்கள் தானே பெரிய அளவில் எழுதப்படுகிறது. வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் , பெயர்பலகைகளில் முதன்மையாக தமிழே இருக்கவேண்டும் என்று எத்தனையோ கோரிக்கைகள் அனுப்ப பட்டும், போராட்டங்களும் நடாத்தப்பட்டும் இருக்கிறது. இதை நடைமுறை படுத்தாமல் ஆட்சி நடத்தும் தி.மு.க அரசுதானே.இந்த செம்மொழி மாநாடு நடத்துகிறது. இதை எப்படி ஆதரிக்க முடியும்?.

  கருணாநிதி சொந்த விசயத்துக்கும் ,புகழுக்கும் எடுக்கும் சிரத்தை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எடுத்தது இல்லை என்பதுதான் உண்மை. இப்போது நடக்கும் வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கும் அப்படியே சால்சாப் பதில் தான் வந்து இருக்கிறது. அவர்கள் என்ன செம்மொழி மாநாட்டுக்கு எதிராகவா போராடுகிறார்கள். தாங்கள் வாதாடும் சென்னைஉயர்நீதிமன்றத்தின் மொழியாக தமிழை ஆக்க வேண்டும் என்கிறார்கள். அவர்களின் போராட்ட வீரியத்தை பயன்படுத்தி சட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம்.. இதற்கு மட்டும் கருணநிதியிடம் இருந்து சட்டம், நீதி, நீதிமன்றம் என்று பதில் வருகிறதே, அமைச்சரவையில் பங்கு கேட்கும் போர்க்குணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட இதில் காட்டவில்லையே..? அப்படியே இவர்களால் முடியாது இதெல்லாம் மத்திய அரசின் கையில் உள்ளது என்று சொல்வார்களானால் தமிழ் மொழி தில்லிக்காரனிடம் அடிமையாக இருக்கிறது என்று தானே பொருள். இந்த மாநாட்டில் இந்த உண்மையை அறிவித்து தமிழ் மொழியின் விடுதலைக்கு வழி வகுக்க போகிறாரா கருணாநிதி. இப்படி கனவிலும் நினைக்க முடியாது. அப்படி இருக்க இந்த மாநாட்டை எப்படி ஆதரிக்க முடியும்.

  இந்திய அரசு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை எல்லம் NRI-களாக காட்டி அவர்கள் இருக்கும் நாடுகளிலெல்லாம் அந்த நாடுகளின் உதவியை பெற்று ஹிந்தி மொழியைப்பரப்பிவருகிறது. அதற்கான நிதியையும் அதிகரித்து வருகிறது. இதை தடுத்து தமிழ் மொழிக்கு நிதி வழங்கவும் தமிழ் மொழியை காப்பாற்றவும் ஏதேனும் திட்டம் தமிழ் நாட்டு அரசின் கொள்கைகளில் இருக்கிறதா ? அல்லது தி.மு.க.வின் கொள்கைகளில்தான் இருக்கிறதா..?அல்லது கூட்டாளியான தில்லி அரசிடம் வலியுறுத்திய கடிதாமவது இருக்கிறதா..?ஏனென்றால் இவர்கள் காட்டும் செயல்பாடு எப்போதும் தில்லிக்கு எழுதும் கடிதம் தான்.

 இதுவரைக்கும் நெடுமாறன் அய்யா நடத்தும் உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு கொடுத்ததே இல்லை. வ்வொரு  முறையும் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியே அனுமதிபெற்று வருகிறார். தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன் பல தமிழ் உணர்வளர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழ் உணர்வாளர்களை நசுக்கும் கருணாநிதி அரசா தமிழ் மொழியை வாழவைக்கப்போகிறது..?
 ஒப்பற்ற திருவள்ளுவருக்கு இணையாக ஏதோ ஒரு துக்கடா கவிஞரான கன்னட சர்வஞர் சிலையை தமிழ்நாட்டில் அனுமதித்த கருணாநிதியின் விவேகம் எவ்வளவு சிறுமைகொண்டது என்பது எளிதாக புரிந்துகொள்ளக்கூடியதே.

 உயர்கல்வியில் தமிழை பயிற்று மொழியாக்க இதுவரை அரசு செய்த முயற்சிகள் என்னவென்றுபார்த்தால் எதுவும் இல்லை. ஆனால் உண்மையில் மருத்துவமொழி, இராணுவமொழி, பயிற்றுமொழி, ஆட்சிமொழி எல்லாமே தமிழில் உருவாக்கி செயற்படுத்திக் காட்டிய தமிழீழத் தேசியத்தலைவர்தான் இந்த தமிழனத்தின் ஓரே தலைவர். அதை பொறுக்காமல் தனது தமிழின தலைவர் பட்டத்தை காப்பற்றிக் கொள்ள இந்திய பார்பனிய அரசின் கைக்கூலியாக இருந்து  தமிழ் இனத்தை காட்டிக்கொடுத்து சாகடித்தவர்தான் கருணாநிதி. இன்று நானும் தமிழினத்தலைவன் ! நானும் தமிழினத்தலைவன் !  என்று வடிவேலு நகைச்சுவை போல( நானும் ரொளடி.. நானும் ரொளடி) சொல்லிக்கொண்டு சொம்மொழி மாநாடு நட்த்துகிறார். இனவெறியன் இராசபக்சே  தமிழர்களின்  மீள்குடியேற்றம், வேலை கொடுக்கிறேன் என்று சொல்வதை எப்படி மோசடி என்கிறோமோ, அதே போன்றுதான் கருணாநிதியின் செம்மொழி மாநாடும். இந்த மாநாடு கருணாநிதிக்கு ஒரு பட்டம் சூட்டு விழாவே அன்றி தமிழுக்கும் இனத்துக்கும் ஒரு கடுகளவும் உதவாது என்பது கருணாநிதியின் கழுத்தறுப்பு வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

  புலிகளின் அறிக்கையைப்பொறுத்தவரை  அவர்கள் எப்போதும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் தங்கள் கருதுக்களைப்பதிவு செய்தது இல்லை..எல்லோரையும் ஆதரவு சக்தியாகவே வைத்து இருக்க விரும்பினர். முள்ளிவாய்க்கால் இழப்பிற்குப் பிறகும் அப்படியே தொடர்வது சரியான அரசியல் பார்வை இல்லை. ஏனென்றால் தற்போது தமிழ்நாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். உளவு நிறுவனங்கள் இதைப்பார்த்து திணறி போய் பழைய செருப்பு மாலை பாணியை கைவிட்டு குண்டுவைக்க தொடங்கி இருக்கின்றன. இது போன்ற அரசியல் பார்வை அந்த இளைஞர்களை தளர்வுற செய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த அறிக்கை சில நல்ல நோக்கங்களுக்காக வெளியிடப்பட்டாலும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் எதிர்ப்பிற்குரியதே.
  தமிழை ஆட்சி மொழியாக்காமல் , கல்வி மொழியாக்காமல் , நீதிமன்ற மொழியாக்காமல் மாநாடு நடத்தினால் தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது ஒரு முட்டாள்தனம். அதை ஆதரிக்கவும் முடியாது..ஆக்கப் பூர்வமாக எந்த செயலும் ஆட்சி பொறுப்பில் இருந்து செய்யாத ஒரு நபர் தன் புகழுக்காக நடத்தும் ஒரு கூத்து தமிழ் வளர்ச்சிக்காக என்று சொல்வதை என்னால் ஜீணிக்க முடியவில்லை.  தி.மு.க தனது மாநாடுகளில் அறுபதுகளில் இருந்தே சில தீர்மாங்களை இயற்றி வருகிறது. அதில் அன்றிலிருந்து மாறாத இரண்டு :1. மாநில சுயாட்சி, 2.சேது சமுத்திரத்திட்டம். இவற்றில் தி.மு.க எள்ளளவும் முன்னேற்றத்தை கண்டது  இல்லை. இதே நிலைதான் கலந்து கொள்ளும் தமிழறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளுக்கும் , இந்த மாநாட்டு தீர்மானங்களுக்கும் என்பது திண்ணம்.  எனக்கு கொஞ்சமும் இந்த செம்மொழி மாநாடு பற்றி   வெற்று சந்தோசப்படுவதற்கான காரணங்கள் கிடைக்கவில்லை.
 அன்பான தமிழ் உறவுகளே உலகத்தில் எந்த இனத்துக்கும் இல்லாத நெருக்கடி தமிழினத்துக்கு இன்று. நாம் தமிழ் இனத்தை காத்து தமிழ் மொழியையும் காக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்திய சிங்கள அரசுகள் தற்ப்போது செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தமிழ், தமிழர் என்ற வார்த்தையை எதிர்காலத்தில் இல்லாமல் செய்யப்போகிறது. தமிழ் நாட்டில் தமிழ் உணர்வாளர்களை ஒடுக்க உளவு நிறுவனங்களுடன் கைகோர்த்து வேட்டையை தொடங்கிவிட்டது கருணாநிதி அரசு . இதையெல்லாம் முறியடித்து வெற்றிகொள்ளும் வேட்கையுடன் விழிப்புடன் இருப்போம். வெற்று ஆராவாராங்களையும் இனத்துரோகிகளையும் புறக்கனித்து தமிழ்தேசிய இலக்கு நோக்கி பயனிப்போம். இதுவே ஒவ்வொரு தமிழனுக்கும் இன்றைய கடமை. 

Saturday, May 1, 2010

மே தின வாழ்த்துக்கள்...


19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் வரைமுறையற்ற சுரண்டலுக்கு உள்ளாகி ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கு மேல் வேலை என்று வாட்டிவதைக்கப்பட்ட முறைக்கு எதிராக எட்டு மணி நேரம் வேலை , எட்டு மணி நேரம் சமூகம் குடும்பம், எட்டு மணி நேரம் உறக்கம் என்னும் நோக்கத்தை முன்வைத்துபோராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 1886-ம் ஆண்டு மே மாதம் முதல் தேதி அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு இதே கருத்தை முன்வைத்து சிகாக்கோ வீதிகளில் இறங்கியது. தொழிலாளர்கள் பெரும் வேலை நிறுத்தங்களையும், பலஇலட்சக்கணக்கானவர்கள் பங்கேற்ற பேரணிகளையும் நடாத்தினர். இதைப் பொறுக்கமுடியாத அமெரிக்க முதலாளித்துவம் காவல்துறையை பயன்படுத்தி துப்பாக்கிகுண்டுகளால் பலரைக் கொன்று குவித்தது. இதுவே தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து நடாத்திய பேரெழுச்சியான போரட்டமாகும். இதன் பிறகு பாரிசில் நடந்த சர்வதேச தொழிலாளர்கள் கூட்ட‌த்தில் சிகாக்கோ வீதிகளில் தொழிலாளர்கள் இரத்தம் சிந்திய நாளான மே முதலாம் திகதியை சர்வதேசதொழிலாளர்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுவது என முடிவுசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மே 1 சர்வதேச தொழிலாளர்தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முதல் மே 1 தினத்தைக் கொண்டாடியவர் தோழர் சிங்காரவேலர்தான். முதலில் உரிமையிழ‌ந்து வரும்தொழிலாளர் வர்க்கத்திற்கு எனது மே தின வாழ்த்துக்கள்.

புதிய உலகமயமாக்கல் மே தினத்தின் தேவையை அதிகமாக்கிக் கொண்டே போகின்றது. மேதினம் என்கிற முதலாளித்துவ‌ எதிர்ப்பு நாளை இன்று தொழிலாளர்களைத் தாண்டி, ஒடுக்கப்படுகிற ஒவ்வொரு வர்க்கமும் உரிமைகளுக்காக போராட ஒரு குறியீடாகப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. புதிய வடிவம் கொண்டுவரும் வல்லாதிக்கம் இன்று தொழிலாளிவர்க்கம் என்று வருவது இல்லை. தேசத்தை தேடி, தேசிய இனங்களை விழுங்கி தங்களின் வல்லாதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றன. தேசம் கடந்த சர்வதேச பாட்டாளி வர்க்கப் போராட்டங்கள் சேர்ந்து இறைமையைப் பாதுகாக்க முடியாது. இது நடைமுறை சாத்தியமற்றதும் ஆகும். ஒவ்வொரு இனமும் தன் இறைமையைப் பாதுகாத்துக்கொள்ள தானே முன்வந்து தன் சூழலுக்கேற்ற போராட்டங்களை வடிவமைக்க வேண்டும். இப்போதைய பொதுவுடைமை நாயகர்களான கியூபாவும் ,சாவேஸும் தமிழ் ஈழத்தில் எல்லையற்ற மனித உரிமை மீறல்களை மேற்க் கொண்ட சிங்கள அரசுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டர்கள். இதன் மூலம் அவர்கள் சொன்ன செய்தி என் நாட்டு நலன் தான் எனக்கு முதன்மை, சேகுவேரா பேசிய தேசிய இனவிடுதலையை நாங்கள் பேசவில்லை. எங்கள் நாட்டு நலனை தாண்டி நாங்கள் சிந்திக்கமாட்டோம் என்பதுதான். ஆகவே நமக்காக நாம்தான் போராடவேண்டும்.

இன்று பல பொதுவுடைமை இயக்கங்கள் தமிழர்களிடம் சர்வதேச பாட்டாளிவர்க்கம்பற்றி பேசி வருகின்றன. இவர்களுக்கு தமிழ் நாட்டு பாட்டாளியை விட சர்வதேசபாட்டாளிதான் மிகவும் முக்கியம். தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகளைக்கூடப் பேசக்கூடது. பேசினால் அது மலையாளப் பாட்டாளிவர்க்கத்தையும், கர்னாடகப் பாட்டாளி வர்க்கத்தையும் பாதிக்குமாம். இதைத்தான் புரட்சிகர பொதுவுடைமைஇயக்கங்கள் முன்வைக்கின்றன. தமிழ்நாட்டில் வேலை இழப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. காவிரியால் வளம்பெற்று வந்த 12 மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கி அதில் வாழ்ந்தவிவசாயத்தொழிலாளர்கள் திருப்பூர் , சென்னை என்று இடம்பெயர்ந்து கூலித்தொழிலாளர்களாக‌ ஒரு நிலையற்ற வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டு ஆற்று நீர் உரிமையை வலிந்து பறித்து வரும் கன்னட‌துக்காரனுக்கும், மலையாளிக்கும் உச்சநீதி மன்றம் வரை அதிகாரம் விரிந்து கிடக்கிறது. எச்சம்சொச்சமாக இருந்து வேளாண்மை தொழில் செய்யும் விவாசயிகளுக்கு விலை நிர்ணய உரிமை இல்லை.பாரம்பரியமாக பயன்படுத்தும் விதைகளைப் பயன்படுத்துவதற்கும் தடைச்சட்டம். இதையும் தாண்டி தமிழனின் காணிகளைக் குறைந்த விலையில் அபகரிக்கும் மலையாளிகள் மற்றும் மாற்றார்கள். சொந்த நாட்டுக்குள்ளே தமிழனுக்கு வீடு இல்லை என்று அறிவிக்கும் மார்வாடிகள். தமிழனின் அனைத்து தொழில் வளங்களையும் அபகரிக்கும் அந்நியர்கள்.இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இனத்தை சூழ்ந்து நிற்கின்றன தமிழ்நாடில். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மறந்தும் இதை பேசாமல் தவிர்த்துவருகின்றனர். அதிகபட்சமாக மக்கள் கிளர்ந்தெழும்போது பிரச்சினை தங்களைக் கடந்து வெற்றி பெற்றிடாமல் இருக்க ஒரு அறிக்கையையும் ஒரு கூட்ட‌த்தையும் நடாத்தி வெற்றி பெருமிதம் கொண்டாடுகிறார்கள். இதை பார்த்து கிளர்ச்சிகொள்ள வேண்டிய தமிழ் இளைஞர்கள் ரசிகர்மன்றங்களிலும், அரசியல்கட்சிகளிலும், சாதி அரசியலிலும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் வெறிகொண்டும் தங்களை இழந்து கிடக்கிறார்கள். இதனால் மேலும் மேலும் வேகமாக தமிழ் நாடு தமிழர்களிடம் இருந்து பறிபோகிறது. இவற்றிலிருந்து இருந்து விடுபட்டு உலகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பாகவும் துணையாகவும் இருக்கவேண்டிய தமிழ்நாட்டு தமிழர்கள் சுய உணர்வின்றி இருப்பது தமிழ் இனத்துக்கே பெரும் கேடாகும். இதையும் தாண்டி ஒரு தமிழன் தன் இன உரிமையை பேசினால் அதை தீவிரவாதமாக்கி ஆளுமையை நிலைநாட்ட ஆதிக்கவர்க்கம் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்கிறது.

இன்று உரிமைகளுகாகப் போராடும் நாள். இந்த நாளில் நாம் ஒருசூழுரையை ஏற்கவேண்டும். தமிழர்களுக்கு விடிவுகொடுக்கும் ஓரே தீர்வு தமிழ்தேசியம்தான். இன்று தமிழினம் சந்திக்கும் ஒடுக்குமுறைகளில் இருந்தும் சுரண்டலில் இருந்தும் வெளிவர இதுவே தீர்வாகும். தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் வளர்க்கப்பட்டு இருந்தால் ஈழப்போராட்ட‌த்தை தோழில் சுமந்து நடத்தி இருப்பார்கள். தமிழ்தேசிய அரசியல் வெற்றிடம் நிரப்பப்படவேண்டும். தமிழ் நட்டில் ஒரு சாரர் தமிழ்ஈழம் வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் தேவை இல்லை எனும் போலி அரசியல் உடையணிந்து நடமாடுகிறார்கள். இது ஒரு உறுதியற்ற ரசிகத்தன்மையுள்ள ஆதரவுக்கூட்டம். தமிழ் நாட்டு உரிமைகளை பேசிக் களம் காண்பவன்தான் தமிழ்ஈழத்திற்கு உறுதியான பற்றுள்ள தோழனாக இருக்க முடியும். இந்திய தேசிய முகமூடியை அணிந்துகொண்டு ஈழத்தை ஆதரிப்பது ஒரு ஆபத்தான ஆதரவு .எப்போதும் மாறக்கூடியது. தமிழ் நாட்டின் தமிழ்தேசியமும் தமிழ் ஈழவிடுதலையும் கைகோர்த்து நிற்கவேண்டிய காலம் வந்துவிட்டது. இனி இது இரண்டும் வேவ்வேறானவை அல்ல. சர்வதேச பாட்டாளிவர்க சிந்தனையைவிட இனம் ஒன்றுபடுதலுக்கும் தன் உரிமைக்காக சேர்ந்து போராடுவதற்கும் நிறைய முன்னுதாரணங்கள் இருக்கின்றன். இந்த விசயங்களை ஆய்வாளர்களும் அரசியல் அறிஞர்களும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..

தோழர் சிவா...

Wednesday, April 14, 2010

தமிழ் புத்தாண்டு




தமிழ் புத்தாண்டு வாழ்த்து எல்லோரும் சொல்கிறார்கள்..பதிலுக்கு நானும் வாழ்த்து சொல்கிறேன். இந்த நேரத்தில் தமிழ்புத்தாண்டு தொடர்பான ஒரு சில செய்திகளை நாம் படித்து ஆகவேண்டும்.
உலகத்தில் புத்தாண்டுகளுக்கு  சில அடிப்படையான  காரணங்கள் இருக்கின்றன. அதில் வானியல் சார்ந்து சந்திரனின் சுழர்ச்சியை அடிப்படையாக கொண்ட புத்தாண்டு ஏப்ரல் மாதத்திலும் ,சூரியனின் சுழர்ச்சியை அடிப்படையாக்க் கொண்ட புத்தாண்டுகள் ஜனவரி மாத்திலும் வரும். இது தவிர கடவுள் படைத்தார்யென்றும் கடவுளின் பிறப்பு அடிபடையான புத்தாண்டுயென்றும் உண்டு.  இதையும் தாண்டி பார்த்தால் புத்தாண்டு என்பது இனத்திற்கு நல்ல காரியங்கள் செய்து இனத்தை மேன்மையடையச் செய்தவர்களின் பிறந்தநாளை புத்தாண்டாக அந்த இனங்கள் ஏற்றுகொன்று கொண்டாடுகின்றன.
இப்போது நாம் கொண்டாடும் சித்திரை மாத பிறப்பு உண்மையில் நம் தமிழ் புத்தாண்டு இல்லை.இந்த புத்தாண்டு சாலிவாகனன் என்ற வட இந்திய மன்னனால் கி.பி 78ல் உருவாக்கப்பட்டது ஆகும். பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் பெயரும் வடமொழியிலெயேதான் இருக்கின்றன. இந்த 60 ஆண்டுகளும் கடவுளின் குழந்தைகள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த குழ்ந்தைகள் கடவுளின் ஓரினசேர்க்கையால் பிறந்தவர்களாம்.இப்படி பல கதைகள் சொல்லப்பட்டாலும் நாம் இந்த சித்திரைமாதம் தமிழர்களின் புது ஆண்டு பிறப்பு என்பதை நிராகரிக்க முக்கிய காரணம், சித்திரை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டாக ஏற்றுக்கொண்ட பிறகு நமது வரலாறு 60 ஆண்டுகளுக்குள் முடக்கப்பட்டது. பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து நிலை பெற்ற தமிழ் இனத்தின் வரலாற்றை அழிக்கும் முயற்ச்சியே சித்திரை முதல் நாளில் தொடங்கும்  தமிழ் புத்தாண்டு.
இந்த ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பாடு, வாழ்வு ஆகியவற்றில் விளைந்த அழிவையும் இழிவையும் எண்ணிப்பார்த்த தமிழ் அறிஞர்கள், மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் 1921.ம் ஆண்டு கூடி ஆராய்ந்து மாற்றாக உருவாக்கியதே திருவள்ளுவர் ஆண்டு .இந்த ஆண்டின் தொடக்கம் தை முதல் நாள் .ஆகவே தமிழ் புத்தாண்டும் தை முதல் நாளே. திருவள்ளுவர் கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்று கணக்கிட்டு திருவள்ளுவர் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 2041 (2010+31) ஆகும். சூரிய வழிபாடு ஒரு இயற்கை வழிபாடு. தொன்றுதொட்டும் வழக்கில் இருக்கும் ஒன்று.அகவே சூரியனை அடிப்படையாகக் கொண்ட வருடப்பிறப்பான திருவள்ளுவர் ஆண்டும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.....
இதைத்தான் தமிழ் புத்தாண்டாக தமிழ் நாடு அரசும் கடைபிடித்து வருகிறது.இதைத்தவிற மாமன்னன் ராஜராஜன் பிறந்தநாளை அடிப்படையாகக் கொண்ட ஆண்டும் தமிழர்களிடம் பழக்கதில் இருந்து இருக்கிறது. தற்ப்போது தமிழ் ஈழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்ட ஆண்டும் சில அமைப்புகளால் பயன்படுத்தப்படுகிறது. எந்த ஆண்டு நிலை பெறும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
ஆனால் கண்டிப்பாக இந்த பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் தமிழர் ஆண்டுகள் இல்லை. ஒரு ஆண்டினை கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில்,முதுவேனில்  என ஆறு பெரும்பொழுதாகவும், ஒரு நாளை வைகறை, சிறுபொழுது, நண்பகல், மாலை, ஏற்பாடு, யாமம் என ஆறு சிருபொழுதாகவும் பகுத்த தமிழர்கள் ஆண்டு பெயர்களை மட்டும் வடமொழியில் வைத்து இருக்கமாட்டார்கள். இது ஒரு ஆரிய சூழ்ச்சிதான். இந்த ஆரிய சூழ்ச்சியை புரிந்துகொண்டு நாம் தமிழர் பண்பாட்டையும் மரபையும் மீட்டெடுக்க வேண்டும். 
ஆரியத்திற்கும் நமக்குமான பகை நீண்டு கொண்டே இருக்கிறது. தற்போது ஈழ விடுதலைப்போரிலும் ஆரியம்தான் இந்திய அரசின் பின் நின்று இயக்கியது. நாம் இவற்றை இனம் கண்டு நமது வேர்களை காக்கவேண்டும்.அதுவே நம் இனத்தின் தூய்மைக்கும் மேன்மைக்கும் நல்லதாகும்...........  

Wednesday, March 24, 2010

தாயக மண்ணே………… தாயக மண்ணே…… எல்லாளன் திரைப்பட பாடல்

 

தாயக மண்ணே………… தாயக மண்ணே……

தாயக மண்ணே………… தாயக மண்ணே……
விடை கொடுதாயே விடை கொடு
விடை கொடுதாயே விடை கொடு
தலைவனின் தேசப்புயல்களுக்காக
வழிவிடுதாயே வழிவிடு
வழிவிடுதாயே வழிவிடு
வழிவிடுதாயே வழிவிடு


உன்னில் பிறந்தோம் உன்னில் வழர்ந்தோம்….. தாயே
உன்னில் பிறந்தோம் உன்னில் வழர்ந்தோம்
உன்னில் எரியும் வரம் இல்லை
தாய்மண்ணே உந்தன் மடியில் தவ...ழும்
மகிழ்வும் இனிமேல் எமக்கில்லை

உன்னில் பிறந்தோம் உன்னில் வழர்ந்தோம்
உன்னில் எரியும் வரம் இல்லை
தாய்மண்ணே உந்தன் மடியில் தவழும்
மகிழ்வும் இனிமேல் எமக்கில்லை


வீசும்காற்றே………. விழையும் நாற்றே……….
வீசும் காற்றே விழையும் நாற்றே
தேசப்புயல்கள் போகின்றோம்
எம் வாசல் பிரிந்தே போகும் பொழுதில்
தாயின் நினைவில் வேகின்றோம்
தாயின் நினைவில் வேகின்றோம்

தேசப்புயல்கள் போகம் திசையில்
மேகம் கசிந்து மழை கொட்டும்
இடி மின்னல் தாக்கம் எங்களைக் கண்டால்
மேனிநடுங்கி கண் பொத்தும்

சிவனொளிபாத மலையது கூட
கரும்புலியென்றால் பயங்கொள்ளும்
சிவனொளிபாத மலையது கூட
கரும்புலியென்றால் பயங்கொள்ளும்

கரிகாலனின் வீரம் காமினி ஊரில்
நாளைய ராவில் பகையள்ளும்
நாளைய ராவில் பகையள்ளும்

குண்டு குருவிகள் எரியும்
பகை கூடுகள் யாவும் கருகும்
குண்டு குருவிகள் எரியும்
பகை கூடுகள் யாவும் கருகும்

வானிடை வந்த கழுகுகள் யாவும்
தீயிடை முழுவதும் கருகும்
வானிடை வந்த கழுகுகள் யாவும்
தீயிடை முழுவதும் கருகும் அழியும்

காடும் வயலும் ஓடும் தெருவும்
யாவும் கடந்தே நடக்கின்றோம்
துட்டகாமினி ஊரில் கரும்புலி வீரம்
காட்டிடவே வெடிகள் சுமக்கின்றோம்

காடும் வயலும் ஓடும் தெருவும்
யாவும் கடந்தே நடக்கின்றோம்
துட்டகாமினி ஊரில் கரும்புலி வீரம்
காட்டிடவே வெடிகள் சுமக்கின்றோம்

நட நட எங்கள் தலைவனை நம்பு
பகைவனும் விலகி வழி சொல்வான்
நட நட எங்கள் தலைவனை நம்பு
பகைவனும் விலகி வழி சொல்வான்

எம் நரம்பினில் ஊறும் விடுதலைத்தீயை
எவனடா வந்து எதிர் கொள்வான்
எவனடா வந்து எதிர் கொள்வான்

கரும்புலி யாரெனத் தெரியும்
பகை கனவுகள் யாவும் சரியும்
கரும்புலி யாரெனத் தெரியும்
பகை கனவுகள் யாவும் சரியும்

இரு இரு நாளை விடியலில் எங்கள்
வருகையின் காரணம் புரியும்
இரு இரு நாளை விடியலில் எங்கள்
வருகையின் காரணம் புரியும் புரியும

 

தமிழ்ப் பெண்.........

மகளிர்தின வாழ்த்துக்கள்.....

தமிழ்ப் பெண்......... !!!




கருவில் நீ பிழைத்தாய்..!!!
கருவிக்கு தடையென்பதால்...
கண்டுபிடிக்கவிடாமல் சுமந்தேன்
பத்துமாதம்...!!
கண் விழித்(தாய்) மண்ணில்
கள்ளிப்பால் காவுகேட்டது.....!
அரக்கக் கணியன் உன்னை பிழைக்க வைத்தான்
அடுத்துவரும் ஆண் வாரிசுக்காய்...

அறியாமை பிழைக்கவும் வைத்தது...!


கஞ்சிக்கே வழியில்லை
கல்வியென்றாய் –கடைசியில்
சத்துணவு சாதித்தது....

அறிவியலென்றாய்
அதிசயக்கதைகள் சொன்னாய்
படிப்பில் முதலென்றாய்
பரிசுகள் பெற்று வந்தாய்...
எனக்கு புரியவில்லை எதுவும்...


அறிவுச்சுடரே –
நீ ஆளப்பிறந்தவள் என்றேன்
நீ நாடேது என்றாய்....
என் கனவென்றேன் காதோரத்தில்....
ஆண்டுகள் கரைந்தோடின....
அடிமையாய் நான் இன்னும்
கனவுகளை சுமக்கிறேன்...




என் மகளே....
என் வரலாறு என்னோடு போகட்டும்
ஈழத்தில் பார்த்தாயோ???
அண்ணன் படையில் தங்கைகள்
அடிமை விலங்கை உடைத்தொரு
ஆளுமை செய்த ஆற்றலை....
களமாடிய கதையை...
புரட்சியேந்திய பூவையரை...
சாதனைக்கு சரித்திரம்
எழுதிய எம் பெண்ணினத்தை...!
இதே வேலை உனக்கும் காத்திருக்கின்றது...
துணிந்து செல்...!!!
துணிந்து செல்...!!!

என்வயிற்றில் பெண் பிறந்தால் கள்ளிப்பால்..!!
உன் வாழ்வில் எம் இனத்துக்கே கள்ளிப்பால்..!!

என் மகளே...!!
எங்கெங்கும் எம் இனத்துக்கே கள்ளிப்பால்....!!

Friday, February 26, 2010

அந்தச் சிறுமி

உன்
வீட்டில்
பூச்செடிகள் இருக்கின்றனவா

உன்
வீட்டில்
பூனைகள் இருக்கின்றனவா

உன்
வீட்டில்
புறாக்கள் இருக்கின்றனவா என்று

பார்ப்பதும்
கேட்பதுமாய்
நுழைந்த சிறுமி

உன்
வீட்டில்
அப்பா
அம்மா
இருக்கின்றார்களா என்றுபோது
வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது
கண்ணிர்.....

நன்றி 

கரும்புலிகள் உயிராயுதம்